உபுண்டு என்பது லினக்சை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு கட்டற்ற இயக்குதளம். விண்டோஸ் என்னும் நன்கு அறியப்பட்ட காப்புரிமை உள்ள மென்பொருளை காசு கொடுத்தோ திருட்டுத் தனமாகவோ பிடித்தோ பிடிக்காமலோ விரும்பியோ வேறு வழியில்லாமலோ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள் உபுண்டுவுக்கு மாறிப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். உபுண்டு முற்றிலும் இலவசம். இதை இணையத்தில் பதிவிறக்கலாம். நாம் விரும்பினால், பைசா செலவின்றி நம் வீடு தேடியும் உபுண்டு இறுவட்டு வரும்.
ஆறு மாதத்துக்கு ஒரு முறை, உபுண்டு புதிய பதிப்புகளை வெளியிடுகிறது. இதனால், புதிய நுட்பங்களின் பலன்கள் நமக்கு உடனுக்குடன் கிடைக்கும். (விஸ்டாவை வெளியிட விண்டோஸ் சித்தப்பா 6 ஆண்டுகள் கொட்டாவி விட்டார்! அடுத்த பதிப்பு எப்பொழுது வரும் என்று அவருக்கே தெரியாது ! ஆனால், எப்பொழுது வரும் என்று தெரியாததாலேயே அவர் super star ஆகி விட முடியாது )
விண்டோசை வைத்திருப்பவர்களும் கூடுதலாக தனி வகிர்வில் உபுண்டு நிறுவிக் கொள்ளலாம். விண்டோசை அழிக்கத் தேவை இல்லை. வெறும் 2 GB அளவு உள்ள வகிர்வு கூட போதுமானது. இரட்டை இயக்குதளங்களாக வைத்துக்கொண்டு தேவைப்படும்போது உபுண்டுவையும் விண்டோசையும் மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். விண்டோசில் உள்ள கோப்புகளை லினக்சில் இருந்தும் அணுகிப் பயன்படுத்த முடியும்.
ஒரே இறுவட்டைக் கொண்டு 25 நிமிடங்களுக்குள் மிக எளிதாக உபுண்டுவை நிறுவி விட முடியும். கணினியில் நிறுவாமலேயே, உபுண்டு எப்படி இருக்கும் என்று நிகழ்வட்டைக் கொண்டு சோதனை முறையில் இயக்கிப் பார்த்து நமக்கு நிறைவு இருக்கும்பட்சத்தில் அதைக் கணினியில் நிறுவ முற்படலாம்.
பாட்டு கேட்க, படம் பார்க்க, குரல் அல்லது நிகழ்பட அரட்டை அடிக்க, கம்பியில்லாமல் இணையத்தை அணுக என்று விண்டோசில் செய்ய இயலும் அனைத்தையும் உபுண்டுவிலும் செய்யலாம்.
நச்சுநிரல் தாக்குதலால் விண்டோஸ் நிலைகுலைவது போல் உபுண்டுவில் நிகழாது. உபுண்டுவின் செயல்பாடு விண்டோசைக் காட்டிலும் வேகம் கூடியது. லினக்ஸ் கற்றுக் கொள்ள, பயன்படுத்தக் கடினமானது என்ற நான் கூட முன்னர் பிழையாக விளங்கிக் கொண்டிருந்தேன். ஆனால், எளிய, கணினிக்குப் புதியோருக்கும் புரியும் புத்திசாலித்தனமான வடிவமைப்பைக் கொண்டுள்ள உபுண்டு இந்த எண்ணத்தை. எங்கள் ஊரில் என் விண்டோஸ் கணினியை இயக்கத் தயங்கிய 10 வயதுப் பிள்ளைகள், உபுண்டுவில் புகுந்து விளையாடினார்கள். உபுண்டுவில் தமிழ் இடைமுகப்பும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான மொழிபெயர்ப்புப் பணிகளும் கூட்டு முயற்சியாகவே நடைபெறுகிறுகின்றன. நாமும் பங்கு கொள்ளலாம். உபுண்டுவில் நமக்கு வேண்டிய தமிழ் விசைப்பலகைகளை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். எல்லா செயலிகளிலும் தமிழ் தட்டச்ச முடியும். எல்லா செயலிகளிலும் தமிழ் எழுத்துக்கள் நன்றாகத் தெரியும்.
மிகப் பழைய கணினிகளிலும் உபுண்டு என்றைக்கும் இயங்கும். பள்ளிகள், வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்களில் செலவே இல்லாமல் நிறுவுவதற்கும் கணினிக்குப் புதியவர்கள் எளிதில் கற்றுக் கொள்வதற்கும், உபுண்டு மிகத் தகுந்தது. (ஓராண்டுக்கு முந்தைய கணினிகளில் விஸ்டா இயங்க இயலாது. இதனால் விண்டோசின் அடுத்தடுத்த புதுப் பதிப்புகளைப் பெற விரும்புவோர் புதுப்புதுக் கணினிகளை வாங்கவும் காசு செலவழிக்க வேண்டும்.)
for running video and mp3 in ubuntu download vlc player from videolan.org. it is a freeware and opensource.
பதிலளிநீக்குBetter download linux mint. it comes with mp3 codecs and video codec preloaded. Once you taste linux mint you will not come back to ubuntu